Subscribe:

Tuesday, September 6, 2011

கடாபியின் மகன்கள் தப்பி ஓட்டம்: இடைக்கால அரசு அறிவிப்பு



லிபியாவின் பானி வாலித் நகரில் ஒளிந்திருந்த கடாபியின் இரு மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,"என்னை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்று சித்ரவதை செய்ததற்காக பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என லிபியா ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

திரிபோலியில் இருந்து தென்கிழக்கில் உள்ள பானி வாலித் நகரை மூன்று புறமும் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டனர். அதேநேரம் ரத்தம் சிந்தாமல் அந்நகரைக் கைப்பற்றும் முயற்சியாக அந்நகரில் உள்ள பழங்குடியினத் தலைவர்களுடன் எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தை முறிந்து விட்டதாகவும், அதனால் நகர் மீதான தாக்குதல் துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து லிபியா இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா ஜலீல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பானி வாலித் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்களுக்கு வரும் 10ம் திகதி வரை கெடு விதித்துள்ளோம். அதுவரை பேச்சுவார்த்தை நடக்கும்.
நகரில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நகரில் பதுங்கியிருந்த கடாபியின் மகன்கள் சயீப் அல் இஸ்லாம் மற்றும் முட்டாசிம் கடாபி இருவரும் தப்பியோடி விட்டனர்.
கடாபி எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரது மகன் கமீஸ் கடாபியும், உளவுத் துறைத் தலைவர் சனுஸ்ஸியின் மகன் முகமதுவும் இறந்து விட்டதை முதன்முறையாக லிபிய இடைக்கால அரசு உறுதி செய்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அஜீசியாவில் உளவுத் துறை அலுவலகத்தில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய உளவு ஆவணங்கள் மூலம் கடாபியின் அரசுக்கும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டனின் உளவுத் துறையான எம்.ஐ.6 ஆகியவற்றுக்கிடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது வெளியானது.
லிபியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லிபியா இஸ்லாமிய போராட்டக் குழுவில் இருந்தவரும், தற்போதைய லிபியா ராணுவப் பிரிவில் தளபதியாகப் பணியாற்றுபவருமான அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் 2004ல் பாங்காக்கில் இருந்த தன்னை சி.ஐ.ஏ மற்றும் எம்.ஐ.6 உளவாளிகள் லிபியாவுக்கு கடத்திச் சென்றதாகவும், தன்னை கொடுமையாகச் சித்ரவதைப் படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பெல்ஹாஜ் நேற்று அளித்த பேட்டி ஒன்றில்,"எனக்கும் என் குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சட்டவிரோதமானவை. இந்தக் கொடுமைகளுக்காக இரு உளவு நிறுவனங்களும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார். பெல்ஹாஜின் இந்தப் பேட்டி குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கருத்து கூற மறுத்து விட்டது.


0 comments:

Post a Comment