Subscribe:

Saturday, September 17, 2011

வடக்கு முஸ்லிம்களுக்கு தீர்க்கமான காலகட்டம்


வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30 வருடங்களுக்கு பின் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தால் 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணிகளே தற்போது வடமாகாணத்தில் இடம்பெற்று வருகிறது.

1990 ஆம் வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான பின்னர் நடைபெறும் முதல் குடிசன மதிப்பீடு என்றும் நாம் இதனை கூறலாம். குடிசன மதிப்பீட்டின் இறுதிக்கட்டப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கணக்கெடுப்புகள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே 2 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட பணிகளே எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன்போதே வீட்டிலுள்ள குடும்பத்தவர்களின் விபரங்கள் பதியப்படுமெனவும் அறியவருகிறது.
இந்நிலையில் வடக்கு முஸ்லிம்கள் எங்கு தமது பதிவுகளை மேற்கொள்வது என்பது பற்றி நாம் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரம் இதுவெனலாம். வடக்கில் ஒரு காலையும், தெற்கில் மற்றுமொரு காலையும் வைக்கும் காலகட்டம் இதுவல்ல என்பதை எமது வடக்கு முஸ்லிம்கள் அறிந்துகொள்ள வேண்டிய இங்கு அவசியமாகிறது.
அண்மையில் புத்தளம் சென்றிருந்த சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் கரீன் வேக்னர் புத்தளம் ஜம்இய்யதுல் உலமாசபைத் தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிமை செவ்வி கண்டபோது அவர் தெரிவித்த கூற்றுக்களும் இங்கு எமது கவனத்தை ஈர்க்கிறது.
‘தற்போது இலங்கையில் இடம்பெயர்ந்தோர் என்ற ஒரு பிரிவினர் இல்லை, அவர்கள் மீள் குடியேறுவதற்கான வசதிகளை அரசு வழங்குகிறது என்று அரசாங்கம் அறிவித்து விட்டது. எனினும் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் மீள்குடியேறாமல் தொடர்ந்தும் புத்தளம் பிரதேசத்தில் வசிப்பதால், புத்தளம் மாவட்டத்துக்கு என அரசாங்கம் ஒதுக்கும் வளப் பங்கீட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை மென்மேலும் கூர்மை நிலை அடையும்’ என்று எதிர்கால ஆபத்தினை விளக்கியுள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்து புத்தளத்திலேயே நிரந்தரமாக வசப்பவர்கள், தம்மை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்துகொண்டால், தற்போது மேற்கொள்ளப்படும் 2011 குடிசன புள்ளி விவரக் கணிப்பில் புத்தளம் மாவட்டத்தில் வதியும் உண்மையான சனத்தொகை காட்டப்படும். அப்போது, அரசாங்கமும் அச்சனத்தொகைக்கு ஏற்ப வள ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும். இவ்வாறு புத்தளத்தில் பதிவுசெய்யாமலும் அதே நேரம் புத்தளத்தின் வள ஒதுக்கீட்டுகளை தொடந்து அனுபவிப்பதும் எதிர்கால நலனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்றும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
மஹ்மூத் ஆலிமின் கூற்றுக்கள் நியாயமிக்கவையே. வடமாகாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களை சுமந்து நிற்கும் புத்தளம் தமது நலன்கள் குறித்து சிந்திப்பது தவறாகாது.
அந்தவகையில் வடக்கு முஸ்லிம்கள் குடிசன மதிப்பீடு நடைபெறும் இவ்வேளையில் எங்கு தமது பதிவுகளை மேற்கொள்வது என்பதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணமிது. வடக்கிலும் பதிவு, புத்தளத்திலும் பதிவு என்பது நிச்சயம் ஏற்புடையதல்ல. ஏதேனும் ஒரு பிரதேசத்தில் பதிவு மேற்கொண்டு அந்த பகுதியில் வளங்களை நுகர்வதே நியாயமானதும்கூட.
வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் பெருமளவு குடியேறினார்கள். இதனால் புத்தள முஸ்லிம் உறவுகளின் வளங்களை வடக்கு முஸ்லிம்கள் நுகர்ந்தது உண்மை. இருந்தபோதும் இங்கு வடக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் ஒரு தவறை மேற்கொண்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதாவது வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், அங்கிருந்த முஸ்லிம்களின் வளங்களை தமிழர்கள் நுகர்ந்தபோது, அதனை நிறுத்தி, முஸ்லிம்களுக்குரிய வளங்களை முஸ்லிம்கள் குடியேறிய பகுதிகளிலேயே நுகர வழியமைத்திருக்க வேண்டும்.
வடக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறு தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் புத்தளம் மற்றும் வடக்கு முஸ்லிம் உறவுகளுக்கிடையே வளங்களை நுகர்வது தொடர்பில் அண்மைக காலங்களில் உருவான அனாவசிய முரண்பாடுகள்கூட தவிர்க்கப்பட்டிருக்கும்.
தற்போதுகூட அந்த வாய்ப்பு வடக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கைகளிலிருந்து தூரவிலகிச் செல்லவில்லை. அரசாங்கத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி வடக்கு முஸ்லிம்களின் வளங்களை வடக்கு முஸ்லிம்களே நுகரும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கலாம். எனவே இதுபற்றி அவசரமாக சிந்திக்கவேண்டியது வடக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் அவசியமாகிறது.
அதேவேளை குடிசன மதிப்பீடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இவ்வேளையில் எமது முஸ்லிம் உறவுகள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் பதிவதா அல்லது தற்போது வாழும் பிரதேசங்களிலேயே பதிந்து கொள்வதா என்பது பற்றிய விளக்கம் மற்றும் விழிப்புணர்வை ஊட்டுவது வடக்கு முஸ்லிம் அமைப்புக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகிகளினதும், மற்றும் முஸ்லிம்சார்பு ஊடகங்களினதும் தலையாய கடமையாகிறது. குறிப்பாக இதுகுறித்து ஒவ்வொரு வடக்கு முஸ்லிமும் தனது நிலைப்பாட்டை மேற்கொள்ளும் தீர்க்ககரமான காலகட்டம் இதுவேயாகும்.
இந்த வாய்ப்பு தவறப்படுமிடத்து அதனால் சமூக ரீதியில் உருவாகும் பாதகங்களும் பயங்கரமானவையாக உருவெடுக்கலாம். இன்னும் 10 வருடங்களுக்கு வடக்கு முஸ்லிம் சமூகம் மௌனிகளாக அவலப்படும் நிலைகூட உருவாகலாம். எனவே பாரதூரத்தின் பயங்கரம் அறிந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதன் பங்காளராவதும் காலத்தின் அவசியமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..!

0 comments:

Post a Comment