Subscribe:

Wednesday, September 14, 2011

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்


ஜெனீவாவில் நேற்று முன்தினம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தேவைக்கு ஏற்புடைய வகையில் உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறுவதற்காக உத்தி யோகபற்றற்ற முறையில் நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்டதே இந்த தருஸ்மன் அறிக்கை என்று சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர் பீரிஸ், ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்தப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளையும் இந்த செயற்பாடு பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டபோதும் அது இந்தக் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுக்கப்படமாட்டாது என்று அரச உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
இதேவேளை இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீமூன் நியமித்துள்ளார். ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அஹமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது.
பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. போது வலயத்தில் இருந்து வெளியேறியமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
அத்துடன் போரின் போது ஐ.நா. நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. என்று செய்திகள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment