ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சோமாலியாவில் 1991ல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப் பகுதி அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளது.
பிற பகுதிகள் பல்வேறு இனக் குழுக்களிடம் உள்ளன. தலைநகர் மொகாடிஷூவும் வேறு ஒரு சில பகுதிகளும் மட்டுமே அரசு வசம் உள்ளன.
இந்நிலையில் ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து உணவு ஆராய்ச்சிக்கான அமைப்பு(எஸ்.எஸ்.என்.ஏ.யு)வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சோமாலியாவில் மொத்தம் 40 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
பஞ்சம் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் ஏழரை லட்சம் பேர் இறந்து விடுவர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பலர் பட்டினியால் இறந்து விட்டனர்.
இந்த 40 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் நாட்டின் தென்பகுதியில் தான் உள்ளனர். ஒட்டு மொத்தமாக கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழையே இல்லாததால் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் பஞ்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ஜிபவுட்டி, எரித்ரியா மற்றும் உகாண்டா நாடுகளிலும் மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.




Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment