Subscribe:

Wednesday, September 7, 2011

செர்னோபில் அணு உலையில் ஆய்வு நடத்த ஜப்பான் குழு விரைவு


உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் ஆய்வு நடத்துவதற்காக ஜப்பான் நிபுணர் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல உள்ளது.
ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தகாஹிரோ யோகோமி சி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி உருவானது. இதில் அங்குள்ள புகுஷிமா அணு உலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அணுக் கதிர்வீச்சு வெளியேற தொடங்கியது. இதனால் அங்கு வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்நாட்டின் நிபுணர் குழு ஒன்று உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணு உலையை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 4வது உலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் அணு உலையில் இருந்து 30 கிலோமீற்றர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அணு உலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள பல்வேறு உலக நாடுகள் நிதியுதவி அளித்தன. அதன்படி தற்போது அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள புகுஷிமா அணு உலையில் எவ்வாறு மறு நிர்மாணப் பணிகள் மேற்கொள்பது, தூய்மைப் பணி மேற்கொள்வது ஆகியவை குறித்து உக்ரைன் நாட்டு அணு விஞ்ஞானிகளின் அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக ஜப்பான் நிபுணர் குழு அங்கு செல்ல உள்ளதாக தகாஹிரோ யோகோமி சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அணுக்கதிர் வெளியேறத் தொடங்கியதால் ஏற்பட்ட கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் உலைகளை குளிர்விக்கும் பணிகள் புகுஷிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் பயனாக கடுமையாக பாதிக்கப்பட்ட 3வது உலையின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1வது உலையின் வெப்பம் ஏற்கெனவே 90 டிகிரி அளவுக்கு குறைந்துவிட்டது.
இதனால் அணுக்கதிர் வீச்சின் அளவும் வெகுவாக குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அணு உலைகளை குளிர்விக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment